ஓர் எளிய யோசனை - ஒரு மொழி பெயர்ப்பு முயற்சி!
கீழுள்ளது MERE SUGGESTION (மூலம்: ·பெர்னான்டோ ஸோரண்டினோ) என்ற சிறுகதையின் தமிழாக்கம்!!
சரியான சொற்களை பயன்படுத்துதல், புரிதல் மற்றும் வீச்சு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் என்னுடையவை மட்டுமே! மன்னிக்கவும்!
ஓர் எளிய யோசனை!
என் நண்பர்கள் நான் யோசனையின் உந்துதலுக்கு மிகவும் ஆட்படுகிறவன் என்கிறார்கள். அது சரியென்று தான் நினைக்கிறேன்! என் நடத்தைக்குச் சான்றாக, அவர்கள், சென்ற வியாழன் நடந்த ஒரு சிறிய நிகழ்வை முன் வைக்கிறார்கள்!!!
அக்காலை வேளையில் நான் ஒரு திகில் நாவலை படித்துக் கொண்டிருந்தேன். அப்பிரகாசமான காலை நேரத்திலும், ஒரு விநோத யோசனை பின்னிய கனத்த வலையில் நான் வீழ்ந்தேன்! அந்த யோசனை, ஒரு கொடிய கொலைகாரன் நீண்ட கத்தியுடன் சமையலறையில் இருப்பதாகவும், நான் அங்கு நுழைந்தால் என் மீது அக்கத்தியை பாய்ச்சக் காத்திருப்பதாகவும் ஆன ஒரு விபரீத எண்ணத்தை என்னுள் ஆழப் புதைத்தது!
நான் சமைலறையின் கதவுக்கு நேரெதிரே அமர்ந்திருந்தேன்! அக்கதவைத் தவிர அவ்வறையை அடைய வேறொரு வழி கிடையாது! என் கண்ணில் படாமல் எவரும் சமையலறைக்குள் செல்ல வாய்ப்பே இல்லை! இவ்வளவும் எனக்குத் தெரிந்திருந்தும், அக்கொலைகாரன் அக்கதவிற்குப் பின்னால் காத்திருப்பதாக தோன்றிய உணர்வை நான் முழுவதும் நம்பினேன்! இவ்வாறாக, அந்த யோசனையின் பலத்த பிடியில் சிக்குண்ட எனக்கு சமைலறையினுள் செல்ல மனத்திடம் இல்லை!
மதிய உணவிற்கான சமயம் நெருங்கிக் கொண்டிருந்ததால், நான் சமையலறைக்குள் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமே என்ற கவலை என்னை ஆட்கொண்டது! அப்போது வாயிற்கதவு தட்டப்பட்டது! "உள்ளே வாருங்கள்! கதவு திறந்தே தான் உள்ளது!" என்று நாற்காலியை விட்டு எழாமலேயே உரக்கக் கூறினேன். எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பார்வையாளர் கையில் கடிதங்களுடன் கதவைத் தள்ளி உள்ளே வந்தார். "என் கால்கள் சற்று மரத்து விட்டன! தயை கூர்ந்து தாங்கள் சமையலறை சென்று, எனக்கு குடிக்கத் தண்ணீர் எடுத்து வர முடியுமா?" என வினவினேன்!!!
அவர் "தாராளமாக!" என்றபடி, சமையலறைக் கதவை திறந்து உள்ளே சென்றார்! அடுத்த நொடி, சமையலறையிலிருந்து மரண ஓலமும், பாத்திரங்களை இழுத்துத் தள்ளியபடி ஒருவர் கீழே சாயும் பெருஞ்சத்தமும் கேட்டது!!! நான் நாற்காலியிலிருந்து பாய்ந்தெழுந்து சமையலறை நோக்கி ஓடினேன்! பாதி உடல் மேசை மேல் கிடந்தவாறு, முதுகில் ஒரு பெரிய கத்தி ஆழச் செருகப்பட்ட நிலையில் கட்டட மேற்பார்வையாளர் மிகவும் இறந்திருந்தார்!!! சற்று நேரத்தில் அமைதியடைந்த நான் சமையலறையில் எந்த ஒரு கொலைகாரனும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன்!
இது, ஓர் எளிய யோசனையின் உந்துதலால் உண்டான ஒரு விஷயம் தான் என்பதும் நிரூபணமாயிற்று!
என்றென்றும் அன்புடன்
பாலா
0 மறுமொழிகள்:
Post a Comment